தமிழில் பிரபலமான பாடலாசிரியர் என்றால் அவர் வைரமுத்துதான். தன் மொழி புலமையாலும் கவி புலமையாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இவர், இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஜூலை 13, 1953 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த இந்த உன்னத கவிஞர் இயக்குனர் பாரதிராஜாவுடன் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்.
இவர் தனது 40 வருட திரையுலக பயணத்தில் சுமார் 7500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். 1980 ஆம் வருடம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த “நிழல்கள்” படத்தில் ‘ஒரு பொன்மாலை பொழுது’ பாடலை எழுதியது மூலம் தன் கவி பயணத்தை தொடங்கினார். இந்தப் பாடலை இளையராஜா இசையமைத்திருந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார்.
வைரமுத்து வரிகளில், இசைஞானி இளையராஜா இசையில், பாரதிராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், மண்வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, கடலோர கவிதைகள் போன்ற வெற்றி படங்களின் பாடல்களைத் தந்துள்ளார்கள்.
பின்பு கே.பாலச்சந்தர் உடன் இணைந்து பல வெற்றிப்படங்களைத் தந்த இவர், ஏ.ஆர்.ரகுமானுடன் “ரோஜா” படத்தில் இணைந்து கொடுத்த வெற்றி பாடல்கள் அவருக்கும் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. பின்பு ரகுமான், மணிரத்தினம் மற்றும் வைரமுத்து இணைந்து திருடா திருடா, அலைபாயுதே, பாம்பே, கன்னத்தில் முத்தமிட்டால், ராவணன், ஓ காதல் கண்மணி போன்ற புதிய வெற்றிப் பாடல்களை கொடுத்தார்கள். இவர் பாடல்கள் மட்டுமின்றி கவிதைகள் மற்றும் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
இவரின் பிறந்தநாளையொட்டி இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில்” என் மண்ணின் மைந்தன் கவிப்பேரரசு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டு அந்த வீடியோவில் வைரமுத்துவை பெரிய கவிஞர் கண்ணதாசனுடன் ஒப்பிட்டு பெருமைப்படுத்தியுள்ளார். ஏழு முறை தேசிய விருது பெற்ற ஒரே இந்திய கவிஞர் என்ற பெருமையை வைரமுத்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.