1985 ஆம் வருடம் பாரதிராஜா தயாரித்து இயக்கிய திரைப்படம் “முதல் மரியாதை”. இந்த படம் வெளியாகி தற்போது 35 வருடங்களில் நிறைவு செய்கிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் இன்றுவரை ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறது. சிவாஜி கணேசன் அவர்களுக்கு ஜோடியாக ராதா இந்தப் படத்தில் நடித்திருந்தார். இசைஞானி இளையராஜா இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக அமைந்தது.
பி.கண்ணன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். வடிவுக்கரசி இந்த படத்தில் ஒரு வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாரதிராஜாவால் திரையுலகிற்கு அறிமுகமான வடிவுக்கரசி மற்றும் ராதா இந்த படத்தில் நடிப்பில் அசத்தியிருந்தார்கள்.
இந்தப்படத்தின் கதை அந்தக் காலத்திலேயே புரட்சி செய்யும் விதமாக அமைந்திருந்தது. இந்த படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது. அதுமட்டுமின்றி சிறந்த பாடல் வரிகளுக்கான விருதை இந்த படத்திற்காக கவிஞர் வைரமுத்து பெற்றார். அதுமட்டுமின்றி பிலிம்பேர் விருதுகளையும் சினிமா எக்பிரஸ் அவார்டும் இந்த படம் பெற்றது.
இந்த படத்தை பற்றி பாரதிராஜா குறிப்பிடும்போது, இந்தப் படத்தில் நடிகர் சிவாஜிகணேசனுடன் பணிபுரிந்தது தனக்கு ஆஸ்கர் விருதை விட மிக உயரிய கௌரவம் என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் ராதா மற்றும் வடிவுக்கரசியின் நடிப்பு குறித்து பாராட்டி பேசியுள்ள பாரதிராஜா, தன்னால் அறிமுகமாகி திரையுலகில் இவ்வளவு உயரம் இவர்கள் வளர்ந்தது நினைத்து பெருமிதம் கொண்டுள்ளார் என்றும் கூறியுள்ளார். முதலில் இந்த படம் இளையராஜா மற்றும் வைரமுத்து அவர்களுக்கு பெரிதாகப் பிடிக்கவில்லை என்றும் பின்பு இதன் கதையை பற்றி விளக்கிய பின்பு அவர்கள் இதில் பணிபுரிய ஒப்புக் கொண்டார்கள் என்றும் பாரதிராஜா சுவாரஸ்யமான தகவலை குறிப்பிட்டுள்ளார்.