தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். விஜய்யின் 67-வது படமான ‘லியோ’வை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படம் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி, ‘பிக் பாஸ்’ ஜனனி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “இப்படத்தில் நடிக்க என்னை அணுகியபோது த்ரிஷாவுடன் பெட்ரூம் காட்சி இருக்கும் என்று நினைத்தேன். அவரை அப்படியே கையில் தூக்கிக் கொண்டு போவேன் என்று எண்ணினேன். நான் எத்தனை படத்துல அதுபோன்ற கற்பழிப்பு காட்சிகளில் நடித்திருக்கிறேன்” என்று பேசியிருந்தார்.
இவர் பேசியதை கேட்டதும் நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சில திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து ட்வீட் போட்டுள்ளனர். தற்போது, இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா “திரு. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.