2017 ஆம் ஆண்டு வெளியான “ஒரு கிடாயின் கருணை மனு” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுரேஷ் சங்கையா. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது இவர் “சத்திய சோதனை” என்னும் படத்தை இயக்கிவருகிறார்.
“ஒரு கிடாயின் கருணை மனு” படத்தில் விதார்த், ரவீனா, ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்கள் பல்வேறு விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து தற்போது முழுக்க முழுக்க காமெடி கதை களத்தை கொண்ட கிராமத்து பின்னணியில் வரும் காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் நிகழும் நிகழ்வுகளை தழுவி எழுதப்பட்ட “சத்திய சோதனை” படத்தை இயக்கிவருகிறார்.
இந்த படத்தில் பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் ஸ்வயம் சித்தா, பிக் பாஸ் ரேஷ்மா, ஞானசம்பந்தம், கேஜி மோகன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் லட்சுமி பாட்டி நடித்துள்ளாராம். இவருக்கும் பிரேம்ஜி அமரனுக்கு இடையே உள்ள காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கும் என்று திரைப்படக் குழு தெரிவித்துள்ளது.
சரண் ஆர்வி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். வெங்கட் இந்த படத்தின் காட்சிகளை எடிட்டிங் செய்துள்ளார். சூப்பர் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை சமீபத்தில் நடிகர் மாதவன் வெளியிட்டார்.
இந்த படத்திற்கு ரகுராம் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் அதில் குறிப்பாக டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் படத்தில் தன்னுடைய காட்சிகளுக்கான டப்பிங் செய்து முடித்து உள்ளதாகவும் பிக்பாஸ் ரேஷ்மா தற்போது செய்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பிக்பாஸ் ரேஷ்மா “படத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பமாகி விட்டன. முதன்முதலாக ராஜபாளையம் வட்டார மொழியில் டப்பிங் செய்துள்ளேன். மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது” என்று இந்த படத்தில் தனது டப்பிங் அனுபவம் குறித்து பதிவிட்டுள்ளார்.
“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் புஷ்பா புருஷன் காமெடி மூலம் புகழ்பெற்றவர் ரேஷ்மா பசுபலேட்டி. இந்தப் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ் பெற்றுள்ளார் ரேஷ்மா.