இன்று நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் சோதனையில் இது புரளி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருகிறார். இவரது இல்லத்தில் இன்று காலை வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
நடிகர் ரஜினி சமீபத்தில் தான் அரசியலில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவரது சமீபத்திய அறிக்கையில் சில அரசியல் கட்சிகளை குற்றம் சாடியும் பேசியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ஒரு மர்ம எண்ணில் இருந்து கால் வந்தது. இதில் பேசியவர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாகவும், அதை உடனடியாக எடுக்காவிட்டால் வெடித்துவிடும் என்றும் மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து தேனாம்பேட்டை போலீஸார் அவசர அவசரமாக ரஜினியின் வீட்டுக்கு சென்று வெடிகுண்டு சோதனை மேற்கொண்டார்கள். பல மணி நேரம் நடந்த இந்த சோதனைக்கு பிறகு வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. அதனால் இந்த மிரட்டல் வெறும் புரளி என்று உறுதி செய்து அங்கிருந்து போலீஸ் கிளம்பிவிட்டனர்.
தற்போது அந்த மர்ம எண்ணிலிருந்து கால் செய்தவர் யார் என்று போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.