துப்பறிவாளனிலிருந்து பாதியில் வந்த மிஷ்கின் அடுத்து சிம்புவை வைத்து படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கிய சைக்கோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்தினை இயக்கினார். அதிரடி பட்ஜெட், படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான விஷாலுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த படத்திலிருந்து மிஷ்கின் வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து விஷாலுக்கு பல சவால்களை விட்ட மிஷ்கின், சிம்புவிடம் ஒரு கதையைக் கூறினார், கதையின் களம் பிடித்துப்போகவே, சிம்புவும் ஓகே சொல்லியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருவதால், அதன் படப்பிடிப்பு முடிந்த கையோடு மிஷ்கின் படத்தில் நடிக்க சிம்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நீண்ட நாளுக்கு பின் வடிவேலுவும், சிம்பு-மிஷ்கின் இணையும் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. நடிப்புக்கு ஸ்கோப்புல்ல கதாபாத்திரம் என்பதால் வடிவேலுவும் இதில் நடிக்க சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விஷாலுடன் போட்ட சவால், தொடர் தோல்வியில் சிம்பு, படமே இல்லாத வடிவேலு இவர்கள் மூவருக்கும் வெற்றி மிகவும் அவசியம் என்பதால் மிஷ்கின் திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
பொதுவாக மிஷ்கின் படத்தில் நகைச்சுவை பிளாக் காமெடி வகையில் இருக்கும் நிலையில், வடிவேலுவை மிஷ்கின் எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.