தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ். 2002-ஆம் ஆண்டு தான் இயக்கிய ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தன் மகன் தனுஷை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார் கஸ்தூரி ராஜா. இந்த படத்துக்கு பிரபல இயக்குநரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் தான் திரைக்கதை எழுதியிருந்தார்.
இந்த படம் ஹிட்டானதும், செல்வராகவனே தனுஷை வைத்து ‘காதல் கொண்டேன்’ என்ற படத்தினை இயக்கினார். இதுவும் வெற்றி பெற்றவுடன், தனுஷ் நடித்த படம் ‘திருடா திருடி’. சுப்ரமணியம் சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் இடம்பெற்ற ‘மன்மத ராசா’ என்ற பாடலுக்கு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்பாடலுக்காகவே அப்படம் மெகா ஹிட்டானது.
அதன் பிறகு தனுஷின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது இவர் நடிப்பில் நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், தனுஷ் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
2004-யில் ரிலீஸான தமிழ் படம் ‘ஆட்டோகிராஃப்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சேரன் இயக்கி, ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் சேரன் தனுஷை அணுகியிருந்தாராம். பின், சில காரணங்களால் தனுஷால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.