“அனைவரும் சிறப்பாக ஈடுபாட்டுடன் உழைத்திருந்தார்கள்”… ‘சார்பட்டா பரம்பரை’ டீமை பாராட்டி சேரன் ட்வீட்!

2012-ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ என்ற சின்ன பட்ஜெட் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் பா.இரஞ்சித். அந்த படத்தின் வெற்றியால் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து கார்த்தியுடன் ‘மெட்ராஸ்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘கபாலி, காலா’ என கூட்டணி அமைத்து சூப்பரான படங்களை கொடுத்தார்.

பா.இரஞ்சித் இயக்கியுள்ள புதிய படமான ‘சார்பட்டா பரம்பரை’ தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸானது. இதில் ஹீரோவாக ஆர்யாவும், ஹீரோயினாக துஷாராவும் நடித்திருந்தனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் பசுபதி, சந்தோஷ் பிரதாப், கலையரசன், ஜான் விஜய், அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், காளி வெங்கட், மாறன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

குத்துச் சண்டை வீரராக ஆர்யா வலம் வந்த இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இன்று இந்த படத்தை பார்த்து ரசித்த பிரபல இயக்குநரும், நடிகருமான சேரன் ட்விட்டரில் “நமது ஊர் சாதனையாளர்களின் மறைக்கப்பட்ட வாழ்வை, சூழ்ச்சியால் சாதனையாளர்களை தடம்புரள வைக்கும் கோர முகம் கொண்ட சமூகத்தை அச்சு அசலாக திரையில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள் இயக்குநர் பா.இரஞ்சித்.

வாழ்த்துக்கள் ஒட்டுமொத்த குழுவிற்கும். சூழ்ச்சியால் வீழ்ந்துவிடாது நேர்மையும் உண்மையும். ஆர்யாவின் கடின உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது..வேறு யாரும் நடித்திருக்கலாம் ஆனால் இவ்வளவு பொருந்தி இருப்பார்களா, உழைத்திருப்பார்களா என தெரியவில்லை.. இயக்குநர் பா.இரஞ்சித் உங்களை ஒவ்வொரு ஃபிரேமிலும் செதுக்கி இருக்கிறார்.. விடா முயற்சியின் மூலம் வென்றிருக்கிறீர்கள் ஆர்யா.. வாழ்த்துக்கள். கபிலன் தொடங்கி பாக்கியம் கதாபாத்திரங்கள் வரை அத்தனை பேரும் சிறப்பாக ஈடுபாட்டுடன் உழைத்திருந்தார்கள்.. ஒருவரின் முயற்சிகூட வீண்போகவில்லை.. கலை அரசன், அனுபமாவின் சிறு சிறு முகபாவனைகள் அழகு” என்று கூறியுள்ளார்.

Share.