தாமதமாக நன்றி சொன்னதால் கலாய்த்த நெட்டிசன்கள்… அதுக்கு சேரன் போட்ட புதிய ட்வீட்!

சினிமாவில் பாப்புலர் நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வருபவர் சேரன். சேரன் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘பாரதி கண்ணம்மா’. அதன் பிறகு ‘பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி’ போன்ற படங்களை இயக்கிய சேரனுக்கு, இயக்குநரும் – ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். அந்த படம் தான் ‘சொல்ல மறந்த கதை’.

‘சொல்ல மறந்த கதை’-க்கு பிறகு சேரன் இயக்கி, நடித்த படங்கள் ‘ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம், திருமணம்’. அதன் பிறகு நடிகர் சேரனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து மற்ற இயக்குநர்களின் இயக்கத்தில் நடிக்க நடிகர் சேரனின் கால்ஷீட் டைரியில் ‘பிரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய், முரண், சென்னையில் ஒரு நாள், மூன்று பேர் மூன்று காதல், ராஜாவுக்கு செக்’ என படங்கள் குவிந்தது. பின், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார் சேரன்.

இப்போது சேரன் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்து கொண்டிருக்கிறார். இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக கெளதம் கார்த்திக் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று கொண்டிருக்கிறது. சமீபத்தில், சேரன் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவத்த ‘சன் டிவி’-க்கு ட்விட்டரில் “மிக்க நன்றி.. தாமதமாகத்தான் பார்க்க நேர்ந்தது..” என்று கூறியிருந்தார். சன் டிவி 2014-ஆம் ஆண்டு போட்ட ட்வீட்டுக்கு சேரன் இந்த ஆண்டு பதில் அளித்ததால், அவரை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். தற்போது, சேரனே ஒரு வடிவேலு மீம்ஸை ட்விட்டரில் ஷேரிட்டு “ஆஹா… சிக்கிட்டமா… சரி… என்ஜாய் பண்ணுவோம்” என்று கூறியுள்ளார்.

Share.