‘என்டமோல் ஷைன்’ நிறுவனத்துக்கு பதிலாக கமலே ‘பிக் பாஸ்’ சீசன் 5-ஐ தயாரிக்கவுள்ளாரா?

  • June 11, 2021 / 03:54 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். சமீபத்தில், ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5-க்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டது.

இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதன் ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை தயாரித்து வரும் ‘என்டமோல் ஷைன்’ நிறுவனம் வெளியேறிவிட்டதாகவும், அதற்கு பதிலாக விஜய் டிவி மகேந்திரனின் ‘டர்மரிக் மீடியா’ நிறுவனத்துடன் இணைந்து கமல் ஹாசனே தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் மூலம் இந்நிகழ்ச்சியை தயாரிக்க உள்ளதாகவும் கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது.

தற்போது, இது தொடர்பாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரித்த போது “கடந்த 2019-ஆம் ஆண்டு ‘என்டமோல் ஷைன்’ நிறுவனத்தை ‘பனிஜெய்’ என்ற நிறுவனம் கைப்பற்றியது. இந்த ‘பனிஜெய்’ நிறுவனம், விஜய் டிவி மகேந்திரனின் ‘டர்மரிக் மீடியா’ மற்றும் கமல் ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து OTT-க்கான வெப் சீரிஸ்களை தயாரிக்க சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், ‘பிக் பாஸ் 5’-ஐ கமல் தயாரிக்க உள்ளதாக பரவும் தகவல் உண்மையல்ல. வதந்தியே” என்று கூறியுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus