தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் என்றால் நடிகர் சூரி அதில் மிகவும் முக்கியமான இடத்தில் இருப்பார். தனது வித்யாசமான நகைச்சுவையால் ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.
1998ஆம் வருடம் வெளிவந்த “மறுமலர்ச்சி” படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்த நடிகர் சூரி, அதைத் தொடர்ந்து பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.
சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வெண்ணிலா கபடி குழு” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்துதான் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.
இந்த படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியில் பரோட்டா குறித்து ஒரு காமெடி அமைந்திருக்கும். அதிலிருந்துதான் அவருக்கு ‘பரோட்டா சூரி’ என்ற பட்டப்பெயர் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து 2011ஆம் ஆண்டு வெளிவந்த “போராளி”, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்த “சுந்தரபாண்டியன்”, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”, “ரஜினிமுருகன்”, பின்பு விஜய் நடிப்பில் வெளிவந்த “ஜில்லா” ஆகிய படங்களில் தன் நகைச்சுவை திறமை மூலம் ரசிகர்களிடையே நீங்காத இடத்தை தற்போது பிடித்துள்ளார்.
இந்த லாக்டவுனில் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் சூரி, அவ்வப்போது அவர் பாணியில் விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
தற்போது சூரி ட்விட்டரில் தன் காளையுடன் இருப்பது போன்ற மாஸ் புகைப்படங்களை வெளியிட்டு “ஊரடங்கு நடுவுல.. ஊரே அடங்கிப் போகும் ..எங்க கருப்பன் நடந்து போனா!” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
சூரி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் “அண்ணாத்த” படத்தில் நடித்துள்ளார். பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஒரு படத்திலும் நடிப்பதற்காக கமிட் ஆகியுள்ளாராம். லாக்டோன் முடிந்ததும் இந்த படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.