இணையத்தில் டிரெண்டாகும் #WeSupportVijaySethupathi

  • May 11, 2020 / 08:55 AM IST

விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தார் தொடர்புடைய சமூக வலைதள பதிவுகளை நீக்கக் கோரி அவரது ரசிகர் மன்றம் சார்பில் சைபர் க்ரைம் போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகர் விஜய் சேதுபதி. நடிகர், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என்று எந்த ரோலாக இருந்தாலும் மறுப்பு ஏதும் சொல்லாலும் ஏற்று நடித்துக் கொடுப்பவர்.தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்து ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அண்மை காலமாக விஜய் சேதுபதி பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சமீபத்தில் கோயில் பற்றி பேசிய ஜோதிகா கருத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக அவரது பெயரில் டுவிட்டரில் பதிவு வெளியிடப்பட்டிருந்தது.ஆனால், அது போலியான டுவிட்டர் என்றும், அதனை தான் பதிவிடவில்லை என்றும் விளக்கம் கொடுத்தார்.இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சன் டிவியின் நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியில், கோயில்களில் சாமிகளுக்கு செய்யப்படும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகள் குறித்து பேசியிருந்தார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையாகி வருகிறது. இந்துக்கள் மற்றும் சாமிகளுக்கு எதிராக விஜய் சேதுபதி கருத்து தெரிவித்து வருவதாக அவர் மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய இந்து மகாசபா மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையிலான நிர்வாகிகள் திருச்சி மாநகர கமிஷனர் அலுவலகத்தில் விஜய் சேதுபதி மீது புகார் அளித்தனர்.இந்த நிலையில், விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்து அவரது ரசிகர்கள் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். விஜய் சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் ஜே குமரேசன் என்பவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

ஜே. குமரன் ஆகிய நான், நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கத்தில் தலைமை செயலாளர் பொறுப்பில் இருக்கிறேன்.நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் ஒரு ஆண்டுக்கு முன்- 17.03.2019 அன்று சன் டி.வி. தொலைக்காட்சியில் ‘நம்ம ஊரு ஹீரோ’ என்ற நிகழ்ச்சியில் மறைந்த கதாசிரியரும், நகைச்சுவை நடிகருமான கிரேசி மோகன் அவர்கள் ஒரு மேடையில் சொன்ன நகைச்சுவை துணுக்கை இந்த நிகழ்ச்சியில் மறுபதிவு செய்தார்.

இப்படி எதார்த்தமாக சொன்ன நகைச்சுவை துணுக்கு ஒன்றை சொன்ன பொருள் தன்மையில் இருந்து மாற்றி, இந்துக்களுக்கு எதிராக விஜய் சேதுபதி சொன்ன கருத்தாக திரித்து அந்த காணொளியை எடிட் செய்து குறிப்பிட்ட சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.வதந்தியை தொடர்ந்து விஜய் சேதுபதியை எதிர்த்தும், ஆதரித்தும் வலைதளத்தில் ஒரு பெரும் சர்ச்சையே நிகழ்கிறது.இந்த சர்ச்சையில் தர்மத்தை பாதுகாக்கும் காவலர்களை போல் வாதிடுபவர்கள், தார்மீக தர்ம முறைகளை மீறி, விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தாரைப் பற்றி தரக்குறைவாகவும், தரம் தாழ்ந்தும் பதிவிடுகிறார்கள்.

இது விஜய் சேதுபதி அவர்களின் நற்பெயரை குலைப்பதோடு, தேவை இல்லாத வலைதள வாக்குவாதங்கள், சமுதாய நல்லிணக்கத்தையும் அமைதியையும் சீர்குலைக்கும் ஒரு தூண்டு கோலாக உருவாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுத்துகிறது.அறிவுசார் சமூகத்தில் வாழும் நாம், தனி மனித கருத்துக்கள் வேறுபட்டிருந்தாலும், ஏற்புடையதாக இல்லாமல் இருந்தாலும், தனி மனித மரியாதையை பாதிக்கும் விதமாக இருக்கக் கூடாது.கருத்துச் சுதந்திரம் என்பது காழ்ப்புணர்ச்சியாகவும், காயப்படுத்தும் விதமாகவும் இருக்கக் கூடாது.

அதனால், உடனடியாக விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரைப் பற்றிய தரக்குறைவான, அருவருக்கத்தக்க உள்ள பதிவுகளை அகற்றவும், இத்தகைய பதிவுகள் வராமல் தடுக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்படிப்பட்ட அவதூறுகளுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்த சர்ச்சைக்குரிய அந்த காணொளியும் நீக்கப்பட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்து அவரது ரசிகர்கள் டுவிட்டரில் #WeSupportVijaySethupathi என்ற ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus