உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனிடையே பலரும் மக்களுக்குத் தங்களால் முடிந்த அளவுக்கு உதவி வருகின்றனர். பல நடிகர்கள் தங்களின் அறக்கட்டளை வாயிலாக மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அளித்து வருகின்றனர்.
இந்த நெருக்கடியான சமயத்தில் ஒருசில பிரபலங்கள் முடங்கியிருக்கும் சினிமாத்துறைக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25 சதவிகிதம் குறைத்துக்கொண்டார். ஹரிஷ் கல்யான் தனது சம்பளத்தில் 50சதவிகிதம் குறைத்துக்கொண்டார். இதுபோல பலரும் சூழ்நிலை அறிந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ஆர்த்தி, “இந்த வருடம் முழுவதும் தான் நடிக்க ஒப்பந்தமாகும் படத்திற்கு ஒரு ரூபாய் சம்பளம் கொடுத்தால் போதும், எனக்கு கொடுக்கும் சம்பளத்தை வைத்து மேலும் துணை கலைஞர்களை ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு தாருங்கள்” என்று அறிவித்துள்ளார்.
இதேபோல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இயக்குனர்கள், நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள முடிவெடுத்து அறிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் உதயா தற்போது தான் நடித்து வரும் அக்னி சாட்சி, மாநாடு படங்களில் சம்பளத்தில் 40 சதவிகிதம் விட்டுக் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார். அதேபோல வில்லன் மற்றும் குணசித்ர நடிகரான அருள்தாஸ் 2020 டிசம்பர் மாதம் வரை தான் நடிக்கும் படம் எதற்கும் சம்பளம் வாங்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.
“நான் பலகோடிகள் சம்பாதிக்கும் நடிகனில்லை சாதாரண நடிகன் தான், எனக்கும் தேவைகள் இருக்கிறது. ஆனாலும் இந்த இக்கட்டான சூழலில் நான் சார்ந்த திரையுலக முதலாளிகளுக்கு கைம்மாறாக இதைச் செய்வதில் மன நிறைவைத்தரும்” என்கிறார் அருள்தாஸ்.