2013ம் ஆண்டு இயக்குனர் கோகுல் இயக்கத்தில் வெளிவந்த “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” திரைப்படம், அதன் நகைச்சுவைக்காக பட்டிதொட்டியெல்லாம் பேசப்பட்டு, ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இந்தப்படத்தின் இயக்குனர் கோகுல் தன் அடுத்த படமான”கொரோனா குமாரு” பற்றி தற்போது செய்தி வெளியிட்டுள்ளார். இந்தப் படம் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் ஸ்பின்ஆப் ஆக இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.
நாடு முழுவதும் கொரோனா பயம், சமுதாய விலகல், கண்ணுக்கு தெரியாமல் பரவும் இந்த நோயின் தன்மை என எங்கு சுற்றிப் பார்த்தாலும் கொரோனா பற்றிய பேச்சுதான். இதையே மையமாக வைத்து, இந்த கதையை உருவாக்கியுள்ளதாகவும், இந்த படத்தில் பல சமுதாய கருத்துக்களை வெளியிடவுள்ளதாகவும் இதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ‘பிரெண்டு லவ் மேட்டரு ஃபீல்லாய்டாப்ல’ , ‘குமுதா ஹாப்பி அண்ணாச்சி’ போன்ற சுவாரஸ்யமான வசனத்தின் மூலம் ரசிகர்களிடையே ஒரு புது ட்ரெண்ட் உருவாக்கியவர் கோகுல். இந்த படத்திலும் இதேபோல வசனங்கள் எழுதியுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
கொரோனா லாக்டவுன் முடிந்து அரசின் அனுமதியுடன் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று படக்குழு தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் தமிழில் முதன்முதலில் வெளியாகப்போகும் ஸ்பின் ஆஃப் ஜானர் திரைப்படம் என்பது சிறப்பம்சம்.
இந்த படத்தை சினிமாவாலா பிக்சர்ஸ் கே.சதீஷ் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படக்குழு பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்கவுள்ளார்கள். கொரோனா லாக்டவுன் காரணமாக மனநெருக்கடியில் இருக்கும் பலருக்கு, அதைப் போக்கும் விதமாக இந்த படம் அமையும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.