பொன்மகள் வந்தாள் படத்தை நேராக அமேசான் பிரைமில் வெளியிட சூர்யா முடிவெடுத்துள்ளதால் அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கோலிவுட்டின் முன்னணி நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராக வலம் வருபவர் சூர்யா. இவரின் மனைவி,தம்பி தந்தை மற்றும் அவரது உறவினர்கள் என குடும்பமே திரைத்துறையில் பணியாற்றி வருகின்றனர். இதனால் இவரின் குடும்பத்தினர் மீது எப்போது சினிமா துறையில் இருப்பவர்களுக்கு ஒரு கண்ணு உண்டு. கோலிவுட்டின் பாரம்பரியமான குடும்பம் என பெயரெடுத்த சூர்யாவின் குடும்பம், சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. செல்ஃபி சர்ச்சை, சுல்தான் சர்ச்சை, தஞ்சை பெரிய கோயில் சர்ச்சை, மத்திய அரசுக்கு எதிரானவர் சூர்யா.. இப்படி பல சர்ச்சைகளில் சிவகுமார் குடும்பம் சிக்கி வருகிறது.
இந்நிலையில் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகாவை பிரதான கதாபாத்திரமாக வைத்து தயாரிக்கப்பட்டிருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’.பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட முக்கிய நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். மார்ச் மாதம் வெளியாகவேண்டிய இப்படம் கொரோனா பாதிப்பால் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. லாக்டவுன் காலம் தொடர்ந்து நீட்டிக்கப்படுவதால் ’பொன்மகள் வந்தாள்’ படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல், அமேசான் டிஜிட்டல் தளத்திற்கு நேரடியாக சூர்யா விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
பொன்மகள் வந்தாள் படத்தை ரூ.9 கோடி ரூபாய்க்கு அமேசான் நிறுவனம் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு விற்பனை செய்ததால், சூர்யாவுக்கு டபுள் மடங்கு லாபம் கிடைத்துள்ளதாகவும், மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு அமேசான் பெருமளவு பணம் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது என சூர்யாவை பலர் புகழ்ந்தாலும், கோலிவுட்டை அழிக்க சூர்யா வழிவகை செய்வதாக பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். நேரடியாக ஓடிடி தளங்களில் சினிமா விற்கப்படுவதால் திரைத்துறையை நம்பியிருக்கும் சினிமா தியேட்டர் மற்றும் அதை நம்பியிருக்கும் தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோருக்கு இது மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்று விமர்சனம் செய்பவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சூர்யாவை தொடர்ந்து பல சிறுபட தயாரிப்பாளர்களும் தங்களது படங்களையும் டிஜிட்டல் தளங்களுக்கு விற்று விட தயாராகி வருகிறார்களாம். இதனால் விநியோகஸ்தர்களும், சினிமா தியேட்டர் உரிமையாளர்களும் கலக்கத்தில் உள்ளனர். பொன்மகள் வந்தாள் படத்தை அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ.பெட்ரிக் என்பவர் இயக்கியிருக்கும் நிலையில், இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து அனைத்து தயாரிப்பாளர்களும் ஆன்லைன் ஸ்டிரீமிங் சைட்டுகளை நாட முடிவெடுத்துள்ளனர்.