சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் படத்திலேயே முன்னணி நடிகரை இயக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைத்து விடாது. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸுக்கு அமைந்தது. அந்த படம் தான் ‘தல’ அஜித் ஹீரோவாக நடித்த ‘தீனா’. ‘தீனா’வின் சக்சஸ், ஏ.ஆர்.முருகதாஸுக்கு ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்தை வைத்து ‘ரமணா’ என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கியது.
‘ரமணா’வும் சூப்பர் ஹிட்டாக தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநரின் லிஸ்டில் இடம் பிடித்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் பிறகு சூர்யாவுடன் ‘கஜினி, 7ஆம் அறிவு’, ‘தளபதி’ விஜய்யுடன் ‘துப்பாக்கி, கத்தி, சர்கார்’, ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவுடன் ‘ஸ்பைடர்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘தர்பார்’ என அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் கைகோர்த்து மாஸ் காட்டினார் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது என கடந்த ஆண்டு தகவல் வந்த வண்ணமிருந்தது.
இப்படத்தில் விஜய் ஹீரோ, வில்லன் என டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டப்போகிறார் என்று சொல்லப்பட்டது. பின், திடீரென இந்த படத்தில் இருந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விலகினார். சமீபத்தில், ஏ.ஆர்.முருகதாஸ் லைவ்-ஆக்ஷன் அனிமேஷன் படமொன்றை இயக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும், டிஸ்னி நிறுவனம் இந்த படத்தை மெகா பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் சொத்து மதிப்பு ரூ.140 கோடி என தகவல் கிடைத்துள்ளது.