“குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக காலண்டரை காட்ட வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல”… ‘ஜெய் பீம்’ சர்ச்சை குறித்து இயக்குநர் அறிக்கை!
November 22, 2021 / 11:08 AM IST
|Follow Us
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள ‘ஜெய் பீம்’, சூர்யாவின் கேரியரில் 39-வது படமாம். இப்படம் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸானது.
சூர்யா வக்கீலாக நடித்திருந்த இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், தமிழ், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், இளவரசு, சுஜாதா சிவக்குமார், சிபி தாமஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும், விமர்சகர்களும் பாராட்டிய வண்ணமுள்ளனர்.
1993-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சந்துரு என்பவர் பழங்குடிப் பெண்ணுக்கு போலீஸால் ஏற்படும் ஒரு பிரச்சனைக்காக நடத்திய உண்மையான வழக்கை மையமாக வைத்து தான் இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்றிருந்த ஒரு காலண்டரால் மிகப் பெரிய சர்ச்சை வெடித்தது. இதனைத் தொடர்ந்து அக்காட்சியிலும் காலண்டர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது, இது தொடர்பாக படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஜெய் பீம் திரைப்படத்திற்கு எல்லா தரப்பினரிடமிருந்தும் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது. அதேபோல, இத்திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறைக் கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை.
பின்னணியில் மாட்டப்படும் ஒரு காலண்டர் படம், ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளபடும் என நான் அறியவில்லை. 1995 காலத்தைப் பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கமே அன்றி, குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல. சில வினாடிகள் மட்டுமே வருகிற அந்தக் காலண்டர் படம் படப்பிடிப்பின்போதும், ‘போஸ்ட் புரடெக்ஷன்’ பணியின்போதும் எங்கள் யாருடைய கவனத்திலும் பதியவில்லை. அமேசான் ப்ரைமில் படம் வெளிவரும் முன்பே, பெரிய திரையில் பல்வேறு தரப்பினரும் திரைப்படத்தைப் பார்த்தனர். அப்போது கவனத்திற்கு வந்திருந்தாலும் கூட , படம் வெளிவரும் முன்பே அதை மாற்றி இருப்போம்.
நவம்பர் மாதம் 1-ம் தேதி இரவு அமேசானில் படம் வெளிவந்தும், காலண்டர் படம் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்தவுடன், உடனடியாக நவம்பர் 2-ம் தேதி காலையே அதை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. யாரும் கேட்பதற்கு முன்பே, அந்த காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகு, எங்களுக்குத் தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என்று நம்பினேன். இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு திரு. சூர்யா அவர்களைப் பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது.
தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இத்திரைப்படத்தில் திரு. சூர்யா அவர்கள், பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தார். இயக்குநராக என்பொருட்டு அவருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலைவடிவமே திரைப்படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இத்திரைப்பட ஆக்கத்தில் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இதன் பொருட்டு மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.