2011 ஆம் ஆண்டு வெளிவந்த “ரௌத்திரம்” எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் கோகுல். இதைத் தொடர்ந்து அவர் விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் ஹிட்டான காமெடி திரைப்படமான “இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” திரைப்படத்தை இயக்கினார்.
பின்பு கார்த்தி நடிப்பில் “காஷ்மோரா”, மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் “ஜூங்கா” ஆகிய திரைப்படங்களை இயக்கிய கோகுல் சமீபத்தில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் தழுவலாக “கோரானா குமாரு” படத்தை இயக்கவிருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தார் .
தற்போது புதிய செய்தி என்னவென்றால் கோகுல் அடுத்ததாக மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான த்ரில்லர் “ஹெலன்” திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாகவும், மலையாளத்தில் ஆன்னா பென் நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி பாண்டியன் நடிக்க உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் கீர்த்தி பாண்டியனின் தந்தை அருண்பாண்டியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்திற்கு “அன்புக்கு இனியாள்” என்று டைட்டில் வைக்கலாம் என்று பேசப்பட்டு வருவதாகவும், ஏ அண்ட் பி ப்ரொடக்ஷன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. எனினும் இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.