முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்துள்ள புதிய படம் ‘சூரரைப் போற்று’. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வரவுள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளாராம்.
மேலும், டோலிவுட் நடிகர் மோகன் பாபு, பாலிவுட் நடிகர்கள் பரேஷ் ராவல் – ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஜாக்கி கலை இயக்குநராகவும், சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். இதற்கு ‘உறியடி’ புகழ் விஜய் குமார் வசனம் எழுதியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தை அக்டோபர் 30-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸ் செய்யப்போவதாக சூர்யா அறிவித்திருந்தார். தற்போது, இது தொடர்பாக பிரபல இயக்குநர் ஹரி வெளியிட்டுள்ள அறிக்கையில் “மதிப்பிற்குரிய திரு.சூர்யா அவர்களுக்கு, உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள்.
ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி. OTT-யில் அல்ல. நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு, தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைதட்டல்களால்தான், நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்து விட வேண்டாம். சினிமா எனும் தொழில் நமக்கு தெய்வம்… தெய்வம் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால், தியேட்டர் என்கிற கோவிலில் இருந்தால் தான் அதற்கு மரியாதை. படைப்பாளிகளின் கற்பனைக்கும், உழைப்புக்கும் ஒரு அங்கீகாரம். தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால், சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்” என்று கூறியுள்ளார்.