தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன் மற்றும் சங்கீதா இணைந்து நடித்து வெளியான “எவனோ ஒருவன்” திரைப்படத்தின் இயக்குனர் நிஷிகாந்த் காமத் கல்லீரல் பிரச்சனை காரணமாக நேற்று உயிரிழந்தார்.
இவர் நடிகர் சூர்யா மற்றும் விஜய்யை வைத்து மராத்தி படமொன்றை தமிழில் இயக்க விருப்பம் தெரிவித்திருந்ததாக நடிகை சங்கீதா தற்போது செய்தி வெளியிட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் கல்லீரல் பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர் திடீரென மரணம் அடைந்தது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இதுகுறித்து நடிகை சங்கீதா கூறியுள்ளதாவது “நிஷிகாந்த் அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது எனக்கு தெரியாது. கொரோனா காரணமாக சோஷியல் மீடியாவில் எங்கு திரும்பினாலும் ஏதாவது நெகட்டிவான செய்திகள் வருவதால் நான் சமூக வலைத்தளங்களை விட்டு விலகி இருந்தேன். அதனால் இவர் கவலைக்கிடமாக இருந்தது எனக்கு தெரியாது. நேற்று காலை திடீரென எனக்கு போன் வந்தது. என் சகோதரர் நிஷிகாந்த் இறந்துவிட்டார் என்ற செய்தியை கூறியவுடன் என்னால் அதிர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. நடிகர் மாதவன் மூலமாக எனக்கு நிஷிகாந்தை தெரியும். பிதாமகன் படத்தில் என் நடிப்பை பார்த்து பிடித்ததால் எவனோ ஒருவன் படத்தில் நடிப்பதற்காக என்னை ஒப்பந்தம் செய்தார். சுமார் ஏழு நாட்கள் தான் இந்த படத்தின் படப்பிடிப்பில் நான் அவருடன் பணி புரிந்துள்ளேன். இவர் எப்பொழுதும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்களை செய்பவர். படத்தை விளம்பரம் செய்ய நான் அமெரிக்கா சென்ற பொழுது அவருடன் பேசி பழக நேரம் கிடைத்தது. இவர் என்னை அம்மா என்று அழைப்பார். சமூகத்தை நினைத்து எப்பொழுதும் கவலைப்படும் இவர் சமூக ஊழலை அதிகளவில் வெறுத்தார். இவர் படங்களில் கூட அந்த கோபத்தை நாம் பார்க்கமுடியும். நீங்கள் பேசாமல் மார்ஸுக்கு செல்லுங்கள் என்று கூட நான் அவரை கிண்டல் செய்துள்ளேன். அப்போது லாய் பாரி மராத்தி படம் ஒன்றில் சூர்யா அல்லது விஜய் வைத்து இயக்க வேண்டும் என்று அவர் என்னிடம் விருப்பம் தெரிவித்திருந்தார்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் நடிகை சங்கீதா.