2012-ஆம் ஆண்டு வெளிவந்த “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை திரும்பிப் பார்க்க செய்த இயக்குனர் பா.ரஞ்சித். இவர் கதைக்கரு சமுதாய முன்னேற்றத்தை பற்றிய நோக்குடனே அமைவது சிறப்பு.
இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், சமுதாயத்தில் இருக்கும் ஜாதி வேறுபாடுகள் குறித்தும்,இவர் தன் படங்களில் ஏன் அதை சுற்றி கதைகரு அமைக்கிறார் என்பது குறித்தும் உருக்கமாக கூறியுள்ளார்.
இவர் படங்களில் காலம் காலமாக இருக்கும் ஸ்டீரியோ டைப் உடைத்து கதைகளை உருவாக்குவார். இவர் முதல்படமான “அட்டகத்தி” காதல் பற்றி சினிமா இதுவரை கூறாத பார்வையிலிருந்து உருவாக்கியிருப்பார். மேலும் “மெட்ராஸ்”படத்தில் ஒரு அரசியல் களம் பற்றி விவரித்திருப்பார்.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் “காலா”,”கபாலி” அகிய இரண்டு படங்களை இயக்கியுள்ள இவர். இரண்டு கதைகளிலும் ஒடுக்கப்பட்ட தலித் சமுதாயத்தை பற்றி மாறுபட்ட கோணங்களில் எடுத்துக் கூறியிருப்பார்.
இதைப்பற்றி அவர் கூறியுள்ளதாவது “சினிமா ஒரு கதையாக மட்டுமல்லாமல் வாழ்க்கையை மாற்றியமைக்கும் ஒரு முக்கிய கருவியாக இங்குள்ள மக்களிடையே நிலவி வருகிறது. அந்த காலத்து திராவிட இயக்கத்தைப் பற்றி கூட சினிமா மூலம்தான் எடுத்துரைத்து பல மாற்றங்களை கொண்டு வந்தார்கள். சில காலங்களிலேயே சினிமா துறையில் மாற்றங்கள் ஏற்பட்டு மேற்தட்டு ஜாதி மக்களைப் பற்றியும் அவர்களின் நிலங்கள் அவர்களின் பெருமை குறித்தும் படங்கள் வரத்தொடங்கின. அப்பொழுது சிறுவயதில் சினிமா பார்க்கும் பொழுது இதில் நான் எங்கு நிற்கிறேன் என் சமுதாயத்தைப் பற்றியும் எங்கள் கலாச்சாரத்தைப் பற்றியும் வாழ்வு முறை பற்றியும் ஏன் எடுத்துக் கூறப்படவில்லை என்ற கேள்விகள் என்னுள் எழுந்தது. இதை மாற்றியமைக்க வேண்டும் என்று என் கதைகளில் அதை பற்றி எடுத்துரைக்க முடிவு செய்தேன். டாக்டர் அம்பேத்கர் எனக்கு முன்னோடியாக இருந்தார். இவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தது அவர்களுக்கென சட்டத்தில் தனி முன்னேற்றங்களுக்கு வித்திட்டது என்று அவரின் தைரியமே எனக்கு பக்கபலமாக அமைந்தது” என்று கூறியுள்ளார்.
மேலும்” கதைகளில் ஒரு தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிர்த்து போராட வேண்டும் என்றால் அவரை பாவமாக சித்தரித்து,அவர்களுக்கு நேரும் கொடுமைகளை காட்டினால் மட்டுமே அவர்களுக்கு அனுதாபம் கிடைக்கும் போன்ற கதாபாத்திரங்களை உருவாக்குவதை தவிர்த்து, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர்கூட அவனுக்காக போராட முடியும், குரல் கொடுத்துக் கொள்ள முடியும் போன்ற கதைகளை உருவாக்குவதே எனது நோக்கமாக இருந்தது. இதைப்பற்றி தான் நான் காலாவிலும் கபாலியிலும் கூற முற்பட்டேன். மேலும் நிற வேறுபாடும் ஜாதி வேறுபாடு பெரிதாக மாறுபட்டவை அல்ல. இரண்டுமே ஒடுக்கப்படும் ஒரு சமுதாயத்தின் பாதிப்பு குறித்த கதையாகும். அதனால்தான் என்னுடைய படங்களில் நிற வேறுபாடு குறித்தும் கூறியிருப்பேன்”என்ற தனது கருத்தை பகிர்ந்து கொண்டார்.
பா .ரஞ்சித் இயக்குனர் மட்டுமல்லாது பரியேறும் பெருமாள்,இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். இவையும் சமுதாய நோக்கங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.