தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பவித்ரன் ஆகியோருக்கு துணை இயக்குனராக தன் திரையுலக பயணத்தை தொடங்கிய ஷங்கர், 1993 ஆம் வருடம் வெளியான “ஜென்டில்மேன்” திரைப்படம் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
ஜென்டில்மேன் அப்போதைய தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் திரைப்படமாக அமைந்தது. அர்ஜுன் சார்ஜா இந்தப்படத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான கதைக் தளத்திற்காக பெரிதும் மக்களால் பாராட்டப்பட்ட இந்த திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்பட்ட ஷங்கர், காதலன், இந்தியன், ஜீன்ஸ் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தயாரித்து இயக்கிய முதல் திரைப்படம் “முதல்வன்”. மீண்டும் அர்ஜுன் சார்ஜாவின் நடிப்பில் முதல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
அடுத்த வருடமே இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்தார்கள். இந்த படத்தை தொடர்ந்து பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, சமீபத்தில் வெளியான “எந்திரன் 2.0” என தமிழ் சினிமாவில் வெளியான பிரம்மாண்ட வெற்றி திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.
தற்போது கமல்ஹாசனுடன் “இந்தியன் 2” திரைப்படத்தில் மட்டுமல்லாது தன் மகளின் திருமண ஏற்பாடுகளுக்காகவும் மிகவும் பிஸியாக இருக்கிறாராம் ஷங்கர்!