சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘ஜென்டில் மேன்’. இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் ஷங்கருக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவருக்கு ‘காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.0’ போன்ற படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2, கேம் சேஞ்சர்’ என இரண்டு படங்கள் உருவாகி வருகிறது.
இதில் ‘இந்தியன் 2’வில் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல்ஹாசனும், ‘கேம் சேஞ்சர்’-ல் டோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ராம் சரணும் நடித்து கொண்டிருக்கிறார்கள். இவ்விரு படங்களின் ஷூட்டிங்கும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், உதவி இயக்குநர் தருண் கார்த்திக்கிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. 2021-ஆம் ஆண்டு புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் தாமோதரனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்று, பின் விவாகரத்தானது குறிப்பிடத்தக்கது.