தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் வசந்த பாலன். ‘வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன்’ ஆகிய படங்களை இயக்கிய வசந்த பாலனின் புதிய படமான ‘ஜெயில்’ ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ‘கைதி’ படம் மூலம் ஃபேமஸான அர்ஜுன் தாஸை வைத்து ஒரு புதிய படம் இயக்கி வந்தார் வசந்த பாலன். இதில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும், சுரேஷ் சக்கரவர்த்தி, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளார்கள். சமீபத்தில், இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது.
கடந்த மே 4-ஆம் தேதி இயக்குநர் வசந்த பாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “அன்புள்ள நண்பர்களுக்கு! நான் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஆதலால் பலருடைய தொலைபேசி அழைப்பை எடுக்க இயலமுடியவில்லை. என் மீது பேரன்பு கொண்ட நண்பர்கள், மருத்துவர்கள், உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதிற்குள் ஆயிரம் யானை பலம் கூடி வருகிறது. ஈராறு கால்கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன்” என்று கூறியிருந்தார்.
தற்போது, வசந்த பாலன் ஃபேஸ்புக்கில் “கடந்த மாதம் ஏப்ரல் 21ம் தேதி கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டு நோய் தீவிரமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மிக்க கடினமான காலக்கட்டம். மருத்துவர்களின் கணிப்பைத் தாண்டி என் நோய்த் தீவிரம் அடைந்தது. இடையறாது நாலாபக்கமும் கிடைத்த மருத்துவ ஆலோசனைகளால், நண்பர்களின் முயற்சியால் பெரும் மருத்துவர்களின் கண்காணிப்பால், செவிலியர்களின் கூர்மையான அக்கறையால், மருத்துவ உதவியாளர்களின் தன்னலமற்ற பணியால் பெருந்தொற்றை அங்குலம் அங்குலமாக கடந்தேன். இலக்கியமும் வாசிப்பும் மனசோர்வின்றி எனை இலவம்பஞ்சைப் போல மிதக்க வைத்தது.
இருபது நாட்கள் கடந்து விட்டதால் கொரோனா தொற்றில்லாத மருத்துவ வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளேன். அடுத்த வாரத்தில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும், என் குருநாதர்களும், சக இயக்குநர்களும், திரையுலக நண்பர்களும், முகமறியா முகப்புத்தக நண்பர்களும் இடையறாது என் மீது பொழிந்த பேரன்பில் மெல்ல மெல்ல வாதையின் பெருங்கொடுக்கிலிருந்து விடுபட்ட வண்ணம் இருக்கிறேன். அன்பு சூழ் உலகில் வாழ்வது வரம் மீண்டு(ம்) வாழ வருகிறேன்” என்று கூறியுள்ளார்.