2002 ஆம் ஆண்டு “ஆல்பம்” என்ற படத்தை இயக்கி பின்பு 2006 பரத், பசுபதி நடிப்பில் வெளியான “வெயில்” படம் மூலம் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குனர் வசந்தபாலன், தொடர்ந்து “அங்காடித்தெரு”, “அரவாண்”, “காவியத்தலைவன்”ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இவர் இயக்கிய “வெயில்” படம் சிறந்த படத்திற்கான தேசிய மற்றும் மாநில விருதைப் பெற்றது. மேலும் சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் அவார்ட் இந்த படத்திற்காக இவர் பெற்றார். இவர் இயக்கத்தில் வெளியான “அங்காடித்தெரு” திரைப்படத்தின் மூலம் சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் அவார்ட் மற்றும் மாநில விருது ஆகியவற்றை பெற்றார்.
சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் தன் கதைக்கும் இயக்கத்துக்கும் என தனித்துவத்தை கொண்டிருக்கிறார் இந்த இயக்குனர். இவர் இயக்கத்தில் வெளியான “காவியத்தலைவன்” திரைப்படம் அவ்வளவாக பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் நார்வே தமிழ் பிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை இவர் பெற்றார்.
தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் “ஜெயில்” படத்தை இயக்கி வருகிறார் வசந்தபாலன். ஒரு நேர்காணலில் காவியத்தலைவன் திரைப்படம் ஏன் அவ்வளவாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை என்ற கேள்விக்கு எடுத்துக்காட்டாக 1997ம் வருடம் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த “இருவர்” படத்தை பற்றி பேசியிருந்தார் வசந்தபாலன்.
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான “இருவர்” படம் அவ்வளவாக மக்களின் வரவேற்பை பெறாத போது மணிரத்னம் இந்த படம் ஏன் வெற்றி பெறவில்லை என்பதற்கு, கூறிய காரணம் தான் காவியத்தலைவன் படத்திற்கும் பொருந்தும் என்று கூறியிருக்கிறார்.
“மணிரத்தினம் சாரிடம் கேட்டதற்கு அவர் சொன்னார்- இரண்டு பேர் ஒருவரை ஒருவருக்கு பிடிக்காது. எனில் இருவரும் அதீத கொடூரத்தனங்களை, இவன் அவனுடைய வீட்டை எரிக்கிறான், அவன் லாரியை விட்டு இவனை கொல்கிறான் என ஓவர் ஆக்ஷன் காட்சிகளை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவ்வாறு இல்லாமல் நண்பர்களாக இருந்த இருவருக்குள் பொறாமை கொண்டு பகைமை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி அதை நுணுக்கமான முறைகளில் இருவரும் காட்டிக் கொள்வது போல் எந்த படத்தின் கதை கூறப்பட்டாலும் அது ரசிகர்களிடையே அவ்வளவாக போய் சேர்வதில்லை. சினிமாவுக்கு அதிக மசாலா தேவைப்படுகிறது. பகை என்றாலே அதிக வன்முறைகளை எதிர்பார்க்கிறது”.
இதே காரணம்தான் காவியத் தலைவனின் வெற்றி பெறாத தன்மைக்கும் காரணம் என்று இயக்குனர் வசந்தபாலன் கூறியிருக்கிறார். மேலும் அவர் “பாகுபலி”யில் இரண்டு வில்லன்களுக்கு நடுவில் இருக்கும் பகையை கொடூரமான காட்சிகள் மூலமும் பிரம்மாண்டமான காட்சிகளின் மூலமும் காட்டியதால் மட்டுமே அது அவ்வளவு பெரிய ரீச் பெற்றது என்றும் கூறியுள்ளார்.