தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த். 1979-ஆம் ஆண்டு வெளியான படம் ‘இனிக்கும் இளமை’. இது தான் விஜயகாந்த் அறிமுகமான முதல் படமாம். ஆனால், இதில் இவர் வில்லன் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு ‘அகல் விளக்கு’ என்ற படத்தில் தான் விஜயகாந்த் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார்.
அடுத்ததாக 1981-ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் விஜயகாந்திற்கு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு இவருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. விஜயகாந்தின் 100-வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ 1991-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார். அதன் பிறகு ‘உளவுத்துறை’ 125-வது படமாகவும், ‘அரசாங்கம்’ 150-வது படமாகவும் விஜயகாந்திற்கு அமைந்தது. ‘அரசாங்கம்’ படத்துக்கு பிறகு ‘மரியாதை, எங்கள் ஆசான், விருதகிரி’ ஆகிய படங்களில் நடித்தார்.
இந்நிலையில், நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. தற்போது, விஜயகாந்த் தரப்பில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார்.
அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம்” என்று கூறியுள்ளனர்.
— Vijayakant (@iVijayakant) November 20, 2023