“விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது”… தேமுதிக சார்பில் வெளியிட்ட அறிக்கை!

  • May 19, 2021 / 11:47 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த். 1979-ஆம் ஆண்டு வெளியான படம் ‘இனிக்கும் இளமை’. இது தான் விஜயகாந்த் அறிமுகமான முதல் படமாம். ஆனால், இதில் இவர் வில்லன் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு ‘அகல் விளக்கு’ என்ற படத்தில் தான் விஜயகாந்த் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார். அடுத்ததாக 1981-ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் விஜயகாந்திற்கு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு இவருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது.

விஜயகாந்தின் 100-வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ 1991-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார். அதன் பிறகு ‘உளவுத்துறை’ 125-வது படமாகவும், ‘அரசாங்கம்’ 150-வது படமாகவும் விஜயகாந்திற்கு அமைந்தது. ‘அரசாங்கம்’ படத்துக்கு பிறகு ‘மரியாதை, எங்கள் ஆசான், விருதகிரி’ ஆகிய படங்களில் நடித்தார். 1990-ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை விஜயகாந்த் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை நடிகர் விஜயகாந்திற்கு திடீரென மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்பட்டு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வந்த வண்ணமுள்ளது. தற்போது, இது தொடர்பாக விஜயகாந்த் தரப்பில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கேப்டன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus