சூர்யாவை தொடர்ந்து பல தயாரிப்பாளர்களும் வரிசை கட்டுகிறார்கள்…!
April 29, 2020 / 09:16 AM IST
|Follow Us
பொன்மகள் வந்தாளை தொடர்ந்து, சர்வர் சுந்தரம், பரமபதம், உள்ளிட்ட பல படங்களும் OTT தளத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT-இல் வெளி வரும் என்ற அறிவிப்பு வந்த உடன் அணைத்து திரையரங்க உரிமையாளர்களும் அதற்கு எதிராக போர் கொடி பிடித்தனர். ஒரு படி மேலே சென்று சூர்யா குடும்பத்தின் படங்களை இனி திரையரங்கில் வெளியிட மாட்டோம் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு விடுத்தது.
இதனையடுத்து 30 பேர் கொண்ட தயாரிப்பாளர் குழு ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டது. அதில் “ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு அந்த படத்தை எந்த விதத்திலும் வியாபாரம் செய்ய முழு உரிமை இருக்கின்றது என்றும்,திரைப்பட துறை வளமாக இயங்க அனைத்து தரப்பினரும் (தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்) ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும், முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம்” என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில் திரிஷா நடித்துள்ள ‘பரமபதம் விளையாட்டு’ படத்தையும் டிஜிட்டல் தளத்தில் வெளியிட படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சித்தார்த்தின் “டக்கர்”, சந்தானம் நடிப்பில் வெகு நாட்களாக திரைக்கு வராமல் இருக்கும் “சர்வர் சுந்தரம்” போன்ற திரைப்படங்களும் OTT-யை நாடியுள்ளதாக தகவல்கள் வருகிறது. சிறிய படங்களுக்கு இது நல்ல லாபமாக அமையும் என்றும் மக்களிடம் சுலபமாக சென்றடையும் என்றும் தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்த நிலை தொடர்ந்தால் மக்கள் திரையரங்குகளுக்கு வருவதை முற்றிலுமாக தவிர்த்து விடுவார்கள், திரையரங்கம் பெரும் இழப்பை சந்திக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் அச்சம் கொள்கின்றனர்.