சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கெளதம் மேனன். இவர் இயக்கிய முதல் தமிழ் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘மின்னலே’. இதில் ஹீரோவாக மாதவன் நடிக்க, அவருக்கு ஜோடியாக ரீமா சென் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அப்பாஸ், விவேக், நாகேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
‘மின்னலே’ படத்துக்கு பிறகு ‘காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா, வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்களை இயக்கினார் கெளதம் மேனன்.
இப்போது கெளதம் மேனன் இயக்கத்தில் வருணின் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’, விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இது தவிர கெளதம் மேனன் நடிப்பில் சிலம்பரசனின் ‘பத்து தல’, விஜய்யின் ‘லியோ’, சூரியின் ‘விடுதலை’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி இயக்குநர் கெளதம் மேனனின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, ‘லியோ’ படத்தின்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் கெளதம் மேனனின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இக்கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஸ்டில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.