தமிழ் திரையுலகில் ஒரே நேரத்தில் ஒரு நடிகராகவும், ஒரு இசையமைப்பாளராகவும் கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இசையமைப்பாளராக டாப் கியரில் சென்று கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், 2015-ஆம் ஆண்டு ‘டார்லிங்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார். அதுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தில் நடித்தார்.
அப்படம் சூப்பர் ஹிட்டாக, ஜி.வி.பிரகாஷின் கால்ஷீட் டைரியில் நடிக்கவும் ஆஃபர்கள் குவிந்தது. இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பல படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘பேச்சுலர்’ எனும் படத்தை சதீஷ் செல்வக்குமார் இயக்க, ஹீரோயினாக திவ்யபாரதி நடித்திருந்தார். இந்த படம் நேற்று (டிசம்பர் 3-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் முனிஷ்காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1.40 கோடியும், உலக அளவில் ரூ.2.15 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.