முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது.
இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி நடித்திருக்கிறார். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் தான் தயாரித்து 2016-ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ரோ’ படத்திலிருந்து காப்பியடித்து எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டதுடன், தனக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டும் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி “வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் இருவரும் வருகிற மார்ச் 17-ஆம் தேதிக்குள் இம்மனுவிற்கு பதில் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.