‘எக்கோ – அகி’ போன்ற இசை நிறுவனங்கள் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்!
February 19, 2022 / 09:15 AM IST
|Follow Us
சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘இசைஞானி’ இளையராஜா. இவருக்கு அமைந்த முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார். அது தான் ‘அன்னக்கிளி’. இந்த படத்தில் சிவக்குமார் ஹீரோவாக நடிக்க, இதனை இயக்குநர்கள் தேவராஜ் – மோகன் இணைந்து இயக்கியிருந்தனர். ‘அன்னக்கிளி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘இசைஞானி’ இளையராஜாவுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைக்க இளையராஜா ஒப்பந்தமானார். தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளிலும் இசையமைத்த ‘இசைஞானி’யின் பல பாடல்கள் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் உள்ளது. கடந்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி சென்னையில் இளையராஜா தனது புதிய ஸ்டுடியோவை துவங்கினார். ஸ்டுடியோ துவங்கிய முதல் நாளில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்துக்கான பாடல்கள் கம்போஸிங் பணியை தொடங்கினார் இளையராஜா.
இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘எக்கோ, அகி’ போன்ற சில இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் முடிந்த பிறகும் தனது பாடல்களை காப்புரிமை பெறாமல் பயன்படுத்தியதாக கூறி வழக்கு தொடர்ந்திருந்தார். பின், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா, ‘எக்கோ – அகி’ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த உரிமை இருக்கிறது என்று தீர்ப்பு அளித்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து இளையராஜா மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது, இவ்வழக்கை இன்று (பிப்ரவரி 18-ஆம் தேதி) விசாரித்த நீதிபதிகள், நீதிபதி அனிதாவின் தீர்ப்புக்கு தடை விதித்தும், இவ்வழக்கு குறித்து ‘எக்கோ – அகி’ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டும், விசாரணையை வருகிற மார்ச் மாதம் 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.