தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த். 1979-ஆம் ஆண்டு வெளியான படம் ‘இனிக்கும் இளமை’. இது தான் விஜயகாந்த் அறிமுகமான முதல் படமாம். ஆனால், இதில் இவர் வில்லன் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு ‘அகல் விளக்கு’ என்ற படத்தில் தான் விஜயகாந்த் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார். அடுத்ததாக 1981-ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் விஜயகாந்திற்கு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு இவருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது.
விஜயகாந்தின் 100-வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ 1991-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார். அதன் பிறகு ‘உளவுத்துறை’ 125-வது படமாகவும், ‘அரசாங்கம்’ 150-வது படமாகவும் விஜயகாந்திற்கு அமைந்தது. ‘அரசாங்கம்’ படத்துக்கு பிறகு ‘மரியாதை, எங்கள் ஆசான், விருதகிரி’ ஆகிய படங்களில் நடித்தார். 1990-ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை விஜயகாந்த் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி, நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின், விஜயகாந்த் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துவிட்டார் என்று சொல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிற்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது, இவர்கள் தொடர்பாக மியாட் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் “தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் கழக பொதுச் செயலாளருமான திரு. விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொருளாளருமான திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இருவருக்கும் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ குழுவினரால் தொடர் மதிப்பீடு செய்யப்பட்டு கண்காணிப்பில் இருந்தனர். இருவரும் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததன் மூலம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
1
2