நடிகர் விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடம்… மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!
April 16, 2021 / 08:42 PM IST
|Follow Us
‘காமெடி’ என்று சொன்னாலே விவேக்கின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் விவேக் பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.
தற்போது, நடிகர் விவேக் நடிப்பில் தமிழில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’ மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. நேற்று (ஏப்ரல் 15-ஆம் தேதி) தான் நடிகர் விவேக் ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 16-ஆம் தேதி) நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது, இது தொடர்பாக அவர் அட்மிட் ஆகியிருக்கும் ‘SIMS’ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் “இன்று காலை 11 மணிக்கு சுயநினைவு இல்லாத நிலையில் இருந்த நடிகர் விவேக்கை அவரது குடும்பத்தினர் எங்களது மருத்துவமனையில் அட்மிட் செய்தனர்.
அவருக்கு ICU-யில் ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, இப்போது எக்மோ கருவி பொருத்தப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இப்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதுக்கு, ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்டது காரணமல்ல” என்று கூறப்பட்டுள்ளது.