தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் இதுவரை 16 இந்திய மொழிகளில் 40000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இவர் ‘கேளடி கண்மணி, திருடா திருடா, காதலன், நாணயம்’ போன்ற பல படங்களில் நடிகராகவும் வலம் வந்திருக்கிறார்.
சமீபத்தில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ பதிவில் “எனக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. பின், மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்ததில் லேசான அளவில் ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை, நீங்கள் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்க என்று சொன்னார்கள்.
இருப்பினும் நான் மருத்துவமனையிலேயே அட்மிட் ஆகி சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று தெரிவித்திருந்தார். தற்போது, இது தொடர்பாக இவர் அட்மிட் ஆகியிருக்கும் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் “எங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியமின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டு, எங்களது சிறப்பு மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.