மேகம் கொட்டட்டும், சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம், வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள, காதல் மகராணி எனப் பல்வேறு இனிமையான பாடல்களில் டிரம்ஸ் வாசித்த இளையராஜாவின் ஆஸ்தான ட்ரம்ஸ் இசைக்கலைஞர் புருஷோத்தமன் மறைந்ததார்.
இசையுலகில் தனக்கென பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருப்பவர் இசைஞானி இளையராஜா. சாமானிய மக்களும் இசையை ரசித்ததோடு, தங்கள் காயத்திற்கு அதை மருந்தாக பயன் படுத்தியதும் இவரால் தான். இந்நிலையில் இளையராஜாவின் ஆஸ்தான இசை கலைஞர், புருஷோத்தமன் மறைந்தது விட்டார். அவரது இழப்பு ராஜாவின் இசைக் குழுவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜா இசையமைத்த அன்னக்கிளி திரைப்படம் முதல், அவருடன் இணைந்து பணியாற்றியவர் இசைக்கலைஞர் புருஷோத்தமன். அவருக்கு தற்போது 70 வயதாகிறது. ரத்த புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இளையராஜாவின் இசைக்குழுவில் டிரம்மராகவும், மேற்பார்வையாளராகவும் பணியாற்றியுள்ளார் புருஷோத்தமன்.
ஜிகே வெங்கடேஷுடன் பணிபுரிந்த சமயத்தில், ராஜாவுக்கு அறிமுகமான அவர் அன்னக்கிளி படத்தில் தொடங்கி, தொடர்ந்து இளையராஜாவின் படங்களில் பணியாற்றி வந்தார். ராஜாவின் ஆஸ்தான கலைஞர் எனவும் பெயர் பெற்றார். ராஜாவுடன் இணைவதற்கு முன்பு திவாகர், கே.வி மகாதேவன், எம்.எஸ் விஸ்வநாதன், சங்கர் கணேஷ் ஆகியோருடனும் பணியாற்றியுள்ளார். அதோடு நிழல்கள் படத்தில் இடம்பெற்ற, மடை திறந்து எனும் பாடலில் டிரம்மராக நடித்தும் உள்ளார்.
இளையராஜாவின் பல்வேறு பாடல்களில் இவரது ட்ரமஸ் இசையை நாம் கேட்டிருக்கிறோம். மேகம் கொட்டட்டும், சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம், வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள, காதல் மகராணி எனப் பல்வேறு இனிமையான பாடல்களில் டிரம்ஸ் வாசித்து அசத்தியவர், மறைந்த புருஷோத்தமன்.
சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தில் வரும், ‘நினைவோ ஒரு பறவை’ பாடலில்தான் தமிழ் திரையிசை வரலாற்றில் முதன் முதலாக ரொட்டோடாம் (Rototom) என்ற புதிய வகை ட்ரம்ஸ் இசைக்கப்பட்டது. அதை சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்து பழகி, வாசித்தவர் ராஜாவின் ஆஸ்தான கலைஞர்களில் ஒருவரான புருஷோத்தமன் தான்.
ஒரு முறை துபாயில் நடந்த இசை விழா ஒன்றில், தன்னுடன் ஆரம்ப காலத்தில் இருந்து பயணிப்பவர் இவர் என்று இளையராஜாவே இவரை பாராட்டி, அறிமுகப்படுத்தி இருந்தார். 2 மாதங்களுக்கு முன்பு தான் புருஷோத்தமனின் மனைவி காலமானார். இந்நிலையில் மூத்த இசைக்கலைஞரின் மறைவு திரையிசைக் கலைஞர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.