இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மீது வருமான வரித்துறை வழக்கு!
September 12, 2020 / 04:15 PM IST
|Follow Us
தமிழ் சினிமா மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவரின் இசைக்கென்று எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் படமான “தில் பச்சாரா”வில் இசையமைத்திருந்தார். இந்தப் படம் ஹாட் ஸ்டார் எனும் ஓடிடி தளத்தில் வெளியானது.
மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்திர்க்கு கௌரவம் அளிக்கும் விதமாக இந்த படத்திற்கு இசையமைத்ததாக ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே கூறியிருந்தார். மேலும் அவரிடம் ஏன் பாலிவுட்டில் அதிக படங்கள் இசையமைப்பதில்லை என்று கேள்வி கேட்டதற்கு, தான் நல்ல படங்களின் வாய்ப்புகளை நிராகரிப்பதில்லை என்றும், ஏதோ ஒரு கும்பல் தன்னைப் பற்றி தவறான விஷயங்களை பரப்பி வருவதாகவும் கூறியிருக்கிறார்.
நெப்போட்டிசம் குறித்து தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட ஏ.ஆர் ரகுமான் அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வந்தார். தற்போது ஏ.ஆர்.ரகுமான் மீது வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த லிப்ரா மொபைல்ஸ் நிறுவனத்திற்கு ரிங்டோன் இசையமைத்து தருவதற்கு ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அதற்காக 3 கோடியே 80 லட்சம் சம்பளப் பணத்தை தனது டிரஸ்டில் நேரடியாக செலுத்தி விடும்படி ரகுமான் கூறி வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்து ஏ.ஆர்.ரகுமான் தரப்பு விளக்கங்கள் கேட்கப்பட்டு வருவதாகவும் இப்போது செய்தி வந்துள்ளது.
இசையமைப்பாளர் AR Rahman மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்| ARR