மாஸ் ஹீரோவின் படம், படங்கள் அனைத்தும் வெற்றி, அடுத்த ஷாருக்கான் படம் இருந்தும் ஏன் ட்ரோல் செய்யப்படுகிறார் அட்லி…!
சமீபகாலமாக அதிகமாக ட்ரோல் செய்யப்படும் இயக்குனர்களில் பிரதானமானவர்கள் அட்லீயாக இருக்கிறார். உண்மையை சொன்னால் நாம் அனைவரும் இயக்குனர்கள் தான், மனதில் நினைப்பதை திரையில் சுவாரஸ்யமாக கொண்டு வருவதில் தான் இருக்கிறது சூட்சமம். நினைப்பதை திரையில் கொண்டு வருபவர்களை இயக்குனர்கள் என்றும், கொண்டு வரமுடியாமல் வெறும் வாயில் பேசிக்கொண்டிருப்பவர்களை ரசிகர்கள் என்கிறோம். திரையில் கொண்டு வருவதற்கு எடுக்கும் நேரம், பணம், வகை இவற்றை வைத்து அவர்களை பட்ஜெட் இயக்குனர், மாஸ் இயக்குனர், ஆர்ட் பிலிம் இயக்குனர் என வகைப்படுத்துகிறோம்.
ராணி ராணியில் அறிமுகமான அட்லி மீது, ஷங்கரின் மாணவர் என்பதாலோ என்னவோ, ஆரம்பத்திலிருந்தே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும் இயக்குனர் ஷங்கர் ஒரு நேர்காணலில், “என் அசிஸ்டண்ட் அட்லி தமிழ் சினிமாவை கலக்குவான்” என்று கூறியதிலிருந்தே அட்லி மீது அனைவரின் கவனம் விழ ஆரம்பித்தது. பல கோடி பட்ஜெட், கிராப்பிக்ஸ் காட்சிகள், ஹாலிவுட்டில் ஹிட்டான சீன்கள் என ஷங்கர் தன்னுடைய ஸ்டைலில் தன் படங்களில் மிரட்டினாலும், அவர் தொழில் கற்றுக்கொண்டது, சாதாரண பட்ஜெட் இயக்குனர்களான எஸ்.ஏ.சந்திரசேகர், பவித்திரன் உள்ளிட்டோர்களிடமிருந்து தான். ஆனால் அட்லியின் கதையே வேறு, அவர் தொழில் கற்றுக்கொண்டதே பிரம்மாண்டத்திடமிருந்து தான், அதாவது ஷங்கரிடமிருந்து தான்.
INSPIRATION..? COPYCAT..? IMPROVAISAITON…?
சினிமாவின் ஆரம்ப காலக்கட்டத்தில் வெளிநாட்டு படங்கள் அல்லது பிறமாநில படங்களை பார்க்க வேண்டும் என்றால், அதற்காக நேரம் ஒதுக்கப்பட்ட திரையரங்குகளில் தான் சென்று பார்க்க முடியும். இது மேல்தட்டு மக்களின் நிலை, சினிமா சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாட்டு படங்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு சென்றோ, அல்லது இந்தியாவிலேயே சிறப்பு ஏற்பாட்டின்படி அதனை பார்க்க முடியும். ஆனால் சாமானியன் நிலை, சொந்த மொழி படத்தை தவிர வேறு எந்த படங்களையும் பார்க்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் இப்போது நிலைமை தலைகீழ், ஹாலிவுட் படங்களை அமெரிக்க மக்கள் முதல்நாள் முதல்ஷோ பார்க்கும் அதே நேரத்தில் நாமும் இங்கு அதனை பார்க்கிறோம். அதனால் பட விமர்சகர்கள் என்ற பேரில் ஈசல் பூச்சியை போல டிஜிட்டல் மீடியாவில் ஏராளமானோர் கிளம்பி விட்டனர்.
ஹிட் படங்களின் கருவு தான் அட்லியின் டார்கெட். அவர் எடுத்த நான்கு படங்களான ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் எல்லாம் காப்பிதான் என்கிறார்கள் விமர்சகர்கள் இதில் ராஜா ராணி – மௌனராகம், தெறி – சத்ரியன், மெர்சல் – அபூர்வ சகோதரர்கள், பிகில் – சக்தே இந்தியா… இதுதான் அட்லீ மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஷங்கருக்கும் அட்லீக்கும் இருக்கும் ஒற்றுமை பிரம்மாண்டம், பெரிய வித்தியாசம் பேச்சு, அட்லீயின் பேச்சில் ஷங்கர் பேச்சில் இருக்கும் தன்னடகம் இருக்காது. நான் பேசக்கூடாது படம் பேச வேண்டும் என்பது ஷங்கரின் ஸ்டைல், ஆனால் அட்லீ இதனை நேர்மாறாக செய்வதால் படம் ரிலீசாகும் முன்பே சர்ச்சைக்குள் ஒவ்வொரு முறையும் சிக்கிக்கொள்கிறார். சக இயக்குனர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுடன் அட்லீ பெரிதாக நட்பு பாராட்டாததும் தான் அவர் சர்ச்சைக்குள் சிக்கும் போது அவரை காப்பாற்ற யாரும் வராததற்கு முக்கிய காரணம் என்றே கருத்தப்படுகிறது.
கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் மைல்கற்களாக கருதப்படும் பாதி படங்களுக்கு மேல் இந்த வகையில் எடுக்கப்பட்ட படங்கள்தான், ராஜபார்வை, மகாநதி, மைக்கேல் மதன காமராஜன், அன்பேசிவம், தெனாலி, பஞ்சதந்திரம் இப்படி நிறைய படங்கள் ஆங்கிலத்திலிருந்து எடுக்கப்பட்டவை… ஆனால் அவரின் படங்களில் மூலக்கரு மட்டும் ஒன்றாக இருக்கும், மீதி அனைத்தும் நம் கலாச்சாரத்திற்கு ஏற்றார் போல் மாற்றப்பட்டிருக்கும். இதை கூறியவுடன் கமலுக்கு ஒரு நியாயம் அட்லீக்கு ஒரு நியாயமா என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியாது.. உண்மைதான்… இருவருக்கும் ஒரே நியாயம்தான்… ஆனால் கமல் இவ்வகையான தழுவல் படங்களை எப்போதும் 100 அல்லது 150 கோடிகள் செலவில் எடுத்ததில்லை, மிக மிக குறைந்த பட்ஜெட்டில்தான் இவ்வகையான தழுவல் படங்களை எடுத்தார். பிரம்மாண்ட படங்களுக்கு சொந்த கதை, கருவை தான் அவர் மூலதனமாக முதலீடு செய்வார். இதில் தான் அட்லீ தவறிவிடுகிறார்… நியாயமும் வித்தியாசப்படுகிறது… இதனை அவர் சரி செய்யாத பட்சத்தில்… அவர் மீது எழும் சர்ச்சைகளும் ஒயாது…
தற்போது ஷாருக்கானுடன் இணையவுள்ள அட்லியின் இந்த காப்பிகேட் வித்தை செல்லுபடியாகாது…ஏனென்றால், ஷாருக்கானுக்கு உலகளவில் வியாபாரம் இருப்பதால், காட்சிகளை திருடினால், சர்வதேச தயாரிப்பாளர்களிடமிருந்து வழக்குகளை சந்திக்க நேரிடும் என்றும் விமர்சகர்கள் அட்லியை எச்சரிக்கின்றனர்.