சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘யசோதா’. இந்த படத்தை இயக்குநர்கள் ஹரி – ஹரிஷ் இயக்கியிருந்தார்கள்.
இதனை ‘ஸ்ரீதேவி மூவிஸ்’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் “சில மாதங்களுக்கு முன்பு Myositis என்ற ஆட்டோ இம்யூன் பாதிப்பு எனக்கு இருப்பது கண்டறியப்பட்டது.
இதற்கான சிகிச்சை எடுத்து குணமான பிறகு தெரிவிக்கலாம் என்றிருந்தேன். ஆனால், இந்த பாதிப்பு குணமாக நான் எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் எடுத்து கொள்கிறது. நான் சீக்கரமே குணமடைந்து விடுவேன் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்” என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், மிக விரைவில் சிகிச்சை எடுப்பதற்காக சமந்தா தென் கொரியாவுக்கு செல்லவிருப்பதாகவும், இதனால் ஏற்கனவே தான் ஒப்பந்தமாகியிருந்த சில ஹிந்தி படங்களில் இருந்து விலகி விட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.
தற்போது, இது குறித்து மீடியாவுக்கு பேட்டி கொடுத்த சமந்தாவின் மேனேஜர் மகேந்திரா “பரவி வரும் இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே. சமந்தா இப்போது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். வருகிற ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிறகு விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ என்ற தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கில் சமந்தா கலந்து கொள்ளவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த ஹிந்தி படங்களின் படப்பிடிப்புகளிலும் கலந்து கொள்வார்” என்று கூறியுள்ளார்.