தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘வாரிசு’-வை வம்சி இயக்கியிருந்தார். இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி இப்படம் ரிலீஸானது.
‘வாரிசு’-வை தொடர்ந்து விஜய்-யின் 67-வது படமான ‘லியோ’வை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறதாம்.
ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்துக்காக விஜய்-க்கு ரூ.200 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மிக விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.