‘ஜெயம்’ ரவி படத்தை தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்… இயக்குநர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இவரது நடிப்பில் வெளியான கடைசி இரண்டு படங்களும் (அடங்க மறு, கோமாளி) சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘ஜெயம்’ ரவியின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

அடுத்ததாக ‘ஜெயம்’ ரவி நடிப்பில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, லக்ஷ்மனின் ‘பூமி’, அஹமத்தின் ‘ஜன கண மன’, மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன்’ பார்ட் 2, இயக்குநர் சூர்யா பாலகுமாரன் படம், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் ‘ஜெயம்’ ரவி தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் அவரது ‘லோகேஷ் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் தயாரிக்க உள்ளாராம். ‘மாநகரம், கைதி, மாஸ்டர்’ போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் முதல் படம் இதுதானாம். இந்த படத்தை ‘மேயாத மான், ஆடை’ மூலம் ஃபேமஸான ரத்னகுமார் இயக்க உள்ளார்.

Share.