OTT-யில் ‘பூமி’… ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த ‘ஜெயம்’ ரவி!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இவரது நடிப்பில் வெளியான கடைசி இரண்டு படங்களும் (அடங்க மறு, கோமாளி) சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘ஜெயம்’ ரவியின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

அடுத்ததாக ‘ஜெயம்’ ரவி நடிப்பில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, லக்ஷ்மனின் ‘பூமி’, அஹமத்தின் ‘ஜன கண மன’, மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன்’ பார்ட் 2, இயக்குநர் சூர்யா பாலகுமாரன் படம், இயக்குநர் ரத்னகுமார் படம், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படம் என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி ‘ஜெயம்’ ரவியின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு ‘பூமி’ படக்குழுவினர் ஒரு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்தனர்.

இந்த படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘தமிழன் என்று சொல்லடா’-வை தயாரிப்பு நிறுவனம் ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. டி.இமான் இசையமைத்துள்ள இந்த பாடல் ‘ஜெயம்’ ரவி ஃபேன்ஸுக்கு சூப்பரான பர்த்டே ட்ரீட்டாக அமைந்தது. இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளாராம். தற்போது, படத்தை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ என்ற OTT தளத்தில் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக ‘ஜெயம்’ ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் “எனது நீண்ட திரைப்பயணம்‌ முழுக்க, முழுக்க ரசிகர்களாகிய உங்களால்‌ ஆனது.

நீங்கள்‌ அளித்த அளவற்ற அன்பு என்‌ மேல்‌ நீங்கள்‌ வைத்த மிகப்பெரும்‌ நம்பிக்கை, நீங்கள்‌ அளித்த உத்வேகம்‌ தான்‌, சிறப்பான படங்களில்‌ நான்‌ பணியாற்ற காரணம்‌. எனது கடினமான காலங்களில்‌, என்னை உங்களின்‌ சொந்த ரத்தம்‌ போலவே நினைத்து ஆதரவளித்தீர்கள்‌. உங்களின்‌ இந்த ஆதரவே, சினிமா மீதான எனது காதலை நிலைபெற செய்தது. நீங்கள்‌ இல்லாமல்‌, என்னால்‌ இத்தனை தூரம்‌ வெற்றிகரமாக பயணித்திருக்க முடியாது. உங்களை எனது குடூம்பத்தினராகவே கருதுகிறேன்‌. ‘பூமி’ திரைப்படம்‌ எனது சினிமா பயணத்தில்‌ ஒரு மைல்‌ கல்‌. இப்படம்‌ எனது திரைப்பயணத்தில்‌ 25 வது படம்‌ என்பதை தாண்டி, என்‌ மனதிற்கு மிகவும்‌ நெருக்கமான படம்‌.

கோவிட்‌-19 காலத்தில்‌ ரிலீஸாகும்‌ படங்களின்‌ வரிசையில்‌ இப்படமும்‌ இணைந்திருக்கிறது. உங்களுடன்‌ இணைந்து திரையரங்கில்‌ இப்படத்தை ரசிக்க நினைத்தேன்‌, ஆனால்‌ காலம்‌ வேறொரு திட்டம்‌ வைத்திருக்கிறது. இப்படம்‌ உங்கள்‌ இல்லம்‌ தேடி உங்கள்‌ வரவேற்பறைக்கே வரவுள்ளது. Disney + Hotstar உடன்‌ இணைந்து உங்களின்‌ 2021 பொங்கல்‌ கொண்டாட்டத்தில்‌ பங்குகொள்வதில்‌ நான்‌ பெருமை கொள்கிறேன்‌.

நிறைய பண்டிகை காலங்களில்‌ திரையரங்கில்‌ வந்து, எனது திரைப்படத்தை பார்த்து, பண்டிகையை கொண்டாடியுள்ளீர்கள்‌. இந்த பொங்கல்‌ பண்டிகை தினத்தில்‌ எனது அழகான திரைப்படத்துடன்‌ உங்கள்‌ வீட்டில்‌ உங்களை சந்திப்பதை, ஆசிர்வாதமாகக் கருதுகிறேன்‌. பெரும்‌ அன்புடனும்‌, நிறைய நம்பிக்கையுடனும்‌, என்‌ திரைப்படத்துடன்‌ உங்களை திரையரங்கில்‌ சந்திக்க காத்திருக்கிறேன்‌. கடவுள்‌ நம்மை ஆசிர்வதிக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

Share.