உலகப் புகழ்பெற்ற நடிகரான ஜானிடெப் தனது 57வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். பைரேட்ஸ் ஆப் கரீபியன் படத்தில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ என்ற வேடத்தின் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்ற இவர் அனைத்து படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை எடுத்து அதில் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இவர் திரையுலகில் நடிக்க ஆரம்பித்தபோது ,அவரது சக நடிகர்கள் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க தயங்குவர். ஆனால் டெப் தனது அதீத நடிப்பாற்றல் மூலம் புதுமையான வேடங்களில் நடித்து அதில் வெற்றி பெறவும் செய்தார் . இவர் தனது 30 வருட திரையுலக அனுபவத்தில் எண்ணற்ற கதாபாத்திரங்களையும் நடிப்பாற்றலையும் வெளிப்படுத்திய அளவுக்கு இன்றைய நடிகர்கள் வெளிப்படுத்த முடியுமா என்பதும் கேள்வியே! அவ்வளவு புகழ் மிக்க இந்த நடிகர் கடந்து வந்த பாதை
மிகவும் கடினமானது.
அவர் எட்வுட் என்ற தன் கதாபாத்திரத்தில் ” இதுதான்.. இதற்காகத்தான் நான் நினைவு கூறப்படுவேன்” என்று கூறுவார். அதைப்போலவே டெப்பின் வாழ்க்கையில் வந்த பல சவால்களை பார்த்து அவர் அஞ்சாமல் முன்னே சென்றுள்ளார்.
ஜானி டெப் இயக்குனர் டிம் பர்டனின் கூட்டணி என்றுமே பாராட்டுதற்குரியதாகவே அமைந்துள்ளது. இவர்கள் இணைந்து உருவாக்கிய எட்வேர்ட் ஸிசர்ஹன்ட்ஸ் , எட்வுட், அலிஸ் இன் வொன்டர் லேண்ட் போன்ற படங்களில் டெப் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய விதம் ரசிகர்களிடையே அவருக்கு நீங்காத இடத்தை பிடித்து கொடுத்தது.
அத்தகைய சிறந்த நடிகர் தன் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். மென்மேலும் இதேபோல புதிய கதாபாத்திரங்களை திரையுலகிற்கு அவர் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.