Vijayakanth : “விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது”… ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்!

  • December 28, 2023 / 01:00 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த். நேற்று முன் தினம் (டிசம்பர் 26-ஆம் தேதி) வழக்கமான பரிசோதனைக்காக விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பின், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 28-ஆம் தேதி) காலை சிகிச்சை பலனின்றி நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் (வயது 71) காலமானார்.

தற்போது, பிரபல நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது. தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்.

தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus