தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். ஆரம்பத்தில் இரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஜூனியர் என்.டி.ஆர், ‘நின்னு சூடாலனி’ என்ற படத்தில் தான் கதையின் நாயகனாக நடித்தார். இந்த படத்துக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ‘ஸ்டுடண்ட் நம்பர் 1’ படத்தில் நடித்தார் ஜூனியர் என்.டி.ஆர்.
‘ஸ்டுடண்ட் நம்பர் 1’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கு படங்கள் குவிந்தது. சமீபத்தில், ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வெளியான படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR). இதில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து ராம் சரண் நடித்திருந்தார். பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்த இந்த படம் மெகா ஹிட்டானது.
‘RRR’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படத்தை கொரட்டாலா சிவா இயக்கவிருக்கிறார். சமீபத்தில், ஜூனியர் என்.டி.ஆரின் 31-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இந்த படத்தை ‘கே.ஜி.எஃப் 1 & 2’ புகழ் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கவுள்ளாராம். தற்போது, இப்படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் நடிக்க ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.