“நிபந்தனையற்ற தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன்”… இயக்குநர் ஜி.என்.ரங்கராஜனின் மறைவு குறித்து கமல் அறிக்கை!

  • June 3, 2021 / 06:05 PM IST

சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல காமெடி நடிகர்கள் விவேக் – பாண்டு – நெல்லை சிவா – மாறன், பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன் – தாமிரா, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் என ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்குமே பிடித்தமான நபர்களின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.

இந்த சூழலில் இன்னொரு மரணச் செய்தி வந்திருக்கிறது. ‘உலக நாயகன்’ கமல் ஹாசனை வைத்து ‘கல்யாணராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா, மகராசன், எல்லாம் இன்ப மயம்’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன். தற்போது, உடல் நலக் குறைவு காரணமாக இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் இன்று இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜி.என்.ரங்கராஜனின் மறைவு தொடர்பாக ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இயக்குநர் ஜி.என்.ரங்கராஜனுக்கு அஞ்சலி! நான்‌ சினிமாவில்‌ நுழைந்த காலம்‌ தொட்டு இறக்கும்‌ தறுவாய்‌ வரை என்‌ மீது மாறாத பிரியம்‌ கொண்டவர்‌ இயக்குநர்‌ ஜி.என்‌.ரங்கராஜன்‌. கடுமையான உழைப்பால்‌ தமிழ்‌ சினிமாவில்‌ தனக்கென்று தனித்த இடத்தை உருவாக்கிக்‌ கொண்டவர்‌. இன்றும்‌ விரும்பிப்‌ பார்க்கப்படும்‌ பல திரைப்படங்களைத் தமிழ்‌ ரசிகர்களுக்குத்‌ தந்தார்‌. அவரது நீட்சியாக மகன் ஜி.என்‌.ஆர்‌.குமரவேலனும்‌ சினிமாவில்‌ தொடர்கிறார்‌.

‘கல்யாணராமன்‌, மீண்டும்‌ கோகிலா, கடல்‌ மீன்கள்‌, எல்லாம்‌ இன்பமயம்‌, மகராசன்‌’ என என்னை வைத்துப் பல வெற்றிப்‌ படங்களைத்‌ தந்தவர்‌. என்‌ மீது கொண்ட மாறாத அன்பால்‌, தான்‌ கட்டிய வீட்டிற்கு ‘கமல்‌ இல்லம்‌’ என்று பெயர்‌ வைத்தார்‌. இன்று அந்த வீட்டிற்கு சற்றேறக்குறைய 30 வயதாகி இருக்கக்‌ கூடும்‌. ஜி.என்‌.ஆர்‌ தன்‌ வீட்டில்‌ இல்லையென்றால்‌ ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ்‌ ரோட்டில்தான்‌ இருப்பார்‌ என்றே எங்களை அறிந்தவர்கள்‌ சொல்வார்கள்‌. சினிமாவில்‌ மட்டுமல்ல, மக்கள்‌ பணியிலும்‌ என்னை வாழ்த்தியவர்‌. எப்போதும்‌ எங்கும்‌ என்‌ தரப்பாகவே இருந்தவர்‌.

சில நாட்களுக்கு முன்பு கூட முகச்சவரம்‌ செய்து பொலிவோடு இருக்க வேண்டும்‌. கமல்‌ பார்த்தால்‌ திட்டுவார்‌ என்று சொல்லி வந்தார்‌ என கேள்வியுற்றேன்‌. தான்‌ ஆரோக்கியமாக இருப்பதையே நான்‌ விரும்புவேன்‌ என்பதை அறிந்தவர்‌. நிபந்தனையற்ற தூய பேரன்பினைப்‌ பொழிந்த ஓர்‌ அண்ணனை இழந்துவிட்டேன்‌. அண்ணி ஜக்குபாய்க்கும்‌, தம்பி இயக்குநர்‌ ஜி.என்‌.ஆர்‌.குமரவேலனுக்கும்‌ குடும்பத்தார்க்கும்‌ என்‌ ஆழ்ந்த இரங்கலைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus