பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்த தினம்… கமல் ஹாசன் போட்ட உருக்கமான ட்வீட்!

  • June 4, 2021 / 07:22 PM IST

தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். 1967-ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மர்யாத ரமண்ணா’ என்ற தெலுங்கு படத்தில் தான் எஸ்.பி.பி பாடிய முதல் பாடல் இடம்பெற்றிருந்தது. இவர் இதுவரை 16 இந்திய மொழிகளில் 40000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இவர் ‘கேளடி கண்மணி, திருடா திருடா, காதலன், நாணயம்’ போன்ற பல படங்களில் நடிகராகவும் வலம் வந்திருக்கிறார்.

சாவித்திரி என்பவரை திருமணம் செய்து கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பல்லவி என்ற மகளும், சரண் என்ற மகனும் உள்ளனர். அதிக பாடல்கள் பாடி கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம்பிடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தினமும் இவரின் பாடலை கேட்காத ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு தன் குரலால் அனைவரின் லைக்ஸையும் குவித்தவர் எஸ்.பி.பி.

கடந்த ஆண்டு (2020) செப்டம்பர் 25-ஆம் தேதி ‘கொரோனா’வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் இயற்கை எய்தினார். இந்நிலையில், இன்று (ஜூன் 4-ஆம் தேதி) எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்த தினம் என்பதால் இவர் தொடர்பாக நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் ட்விட்டரில் “அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன், எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு…” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus