அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கனா. இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்த சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்தும் இருந்தார்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கணையாக நடித்திருந்தார். கிராமத்தில் பிறந்து கிரிக்கெட் வீராங்கணையாக வளரத் துடிக்கும் ஒரு இளம் பெண்ணின் கதையை இந்தப் படம் கதைக் கருவாகக் கொண்டிருந்தது.
தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் இந்த படத்தின் காட்சிகளை ரூபன் எடிட்டிங் செய்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திபூ நினன் தாமஸ் இந்த படத்தின் பாடல்களை இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தில் வரும் “ஒத்தையடி பாதையில” பாடல் தற்போது 100 மில்லியன் வியூஸ்களை யூடியூபில் பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னர் இந்த படத்தில் உள்ள வாயாடி பெத்த புள்ள என்ற பாடல் ஏற்கனவே 100மில்லியன் வீயூஸ்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் திபூ மகிழ்ச்சியில் இருக்கிறார். இதைப்பற்றி திபூ கூறியுள்ளதாவது ” இந்த படத்திற்கான பாராட்டுக்கள் எனக்கு வந்த வண்ணம் உள்ளது, அதனால் நான் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறேன். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு போன் செய்து இன்னொரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று கூறினார். பின்னர் அவர் இந்த படத்தின் மொத்த பாடல்களும் சுமார் 500 மில்லியன் வியூஸ்களை யூடியூபில் பெற்றுள்ளதை பதிவிட்டிருந்தார். இது இன்னும் பேருவகையாக உள்ளது. கனா மாதிரி ஒரு சின்ன படத்திற்கு இவ்வளவு பெரிய வெற்றி என்பது எங்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த பலனே ஆகும். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை” என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் ” இந்தப் படத்தில் உள்ள மற்ற மூன்று பாடல்களுக்கும் ரசிகர்கள் ரசித்திருக்கிறார்கள் என்பதை கேட்டதில் மகிழ்ச்சியடைந்துள்ளேன். இந்த படத்தில் வரும் “சவால்” பாடல் ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது என்று பலரும் எனக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். “வாயாடி பெத்த புள்ள” பாடல் ரிலீசான மறுநிமிடமே வைரலாகி விட்டது. ஆனால் “ஒத்தையடி பாதையிலே” பாடல் மெதுவாக ரசிகர்களின் கவனத்தைப் பெற்று தற்போது சாதனை படைத்துள்ளது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.