தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் மலையாளத்தில் ‘பாட்டு’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ‘நெற்றிக்கண்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை நயன்தாராவின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். மேலும், ‘நெற்றிக்கண்’ படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க, மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார்.
தற்போது, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா தனது கால்ஷீட் டைரியில் இணைய இரண்டு புதிய படங்களுக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்விரண்டு படங்களையும் ‘பேஷன் ஸ்டுடியோஸ் – அபிஷேக் ஃபிலிம்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாம். இதில் ஒரு படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளாராம். இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல கன்னட நடிகர் சுதீப் நடிக்க உள்ளாராம்.