‘கர்ணன்’ படத்தின் ‘பண்டாரத்தி புராணம்’ பாடல் சர்ச்சை… இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு!

  • March 25, 2021 / 04:08 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என பத்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘கர்ணன்’ என்ற படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே கதிரை வைத்து ‘பரியேறும் பெருமாள்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கர்ணன்’ படத்தில் கதையின் நாயகியாக ரஜிஷா விஜயன் வலம் வருவாராம். மேலும், கௌரி கிஷன், யோகி பாபு, லால், அழகம் பெருமாள் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது. படத்தை வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். சமீபத்தில், இப்படத்தின் டீசர் மற்றும் ‘கண்டா வரச்சொல்லுங்க’, ‘பண்டாரத்தி புராணம்’, ‘தட்டான் தட்டான்’ ஆகிய மூன்று பாடல்களையும் ரிலீஸ் செய்தனர். இதில் ‘பண்டாரத்தி புராணம்’ பாடல் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது.

தற்போது, இது தொடர்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அனைவருக்கும் அன்பின் வணக்கம். கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது. அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன்.

பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான். சொந்த அத்தையாக அக்காவாக ஆச்சியாக பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிபடுத்தினேன். ஆனால் நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.

தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டாலென்ன… பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிட போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள். இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான் கர்ணன் ஆடுவான். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும்… காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம் (குறிப்பு : படத்தில் மாற்றம் செய்யபட்டதை போலவே இணையத்திலும் மாற்றம் செய்யபட்டுவிட்டது. YouTube விதியின் படி ஓரிரு நாளில் தானாக மாறிவிடும்)” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus